World Arabic Language Day

World Arabic Language Day | உலக அரபிக் தினம் |December 18

அரபு மொழிக்கு தனியாக ஒரு நாளை ஐநா கொண்டாடுகிறது. 2010 முதல் இந்த “உலக அரபிக் தினம்” கடைப்பிடிக்கப்படுகிறது (World Arabic Language Day). 1973ல் டிசம்பர் 18ந் தேதி ஐநாவின் அதிகாரப்பூர்வ அலுவல் மொழிகளாக உலகின் ஆறு பெரும் செம்மொழிகள் அறிவிக்கப்பட்டது. அவற்றில் பிரெஞ்சு, ஆங்கிலம், ஸ்பானிஷ், ரஷ்யன்,சீனம் மற்றும் அரபும் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.

அரபு மொழி பண்டைய செமிதிக் மொழிக்குடும்பத்தில் இருந்து பிரிந்து வந்த ஒரு மொழியாகினும் அதன் பெரும்பாலான சொற்கள் ஆப்பிரிக்க ஆசிய மொழிக் குடும்பத்துடன் தொடர்புடைய மொழியாக உள்ளது,  அரமைக் மொழி, ஹீப்ரு மொழி, அம்காரிய மொழி மற்றும் ப்ரோட்டோ இன்டோ-ஆர்யன் மொழிகளுடன் தொடர்புடையதாயும் உள்ளது. சவூதி அராபிய உட்பட  21 நாடுகளில் அரபு  மொழி ஆட்சி மொழியாக விளங்குகிறது. 183 மில்லியன் மக்களின் தாய்மொழியாக அரபு மொழி இருக்கிறது. அரபு மொழிக்கு கிட்டத்தட்ட 30 விதமான டைலக்ட்ஸ் எனப்படும் பிராந்திய உச்சரிப்பு உண்டு. அவற்றில் எகிப்தி, மக்ரூபி,ஹஜஸி,ஏமனி,சுடானி,நஜ்தி, மெசபடோமி மற்றும் லெவன்டீன் ஆகியவை முக்கியமானதாகும்.

World Arabic Day

 

ஐநா மட்டுமன்றி ஆப்பிரிக்க யூனியன், அரபுலீக், ஆர்கனைசேஷன் ஆப் இஸ்லாமிக் கோஆப்ரேஷன் ஆகியவற்றிற்கும் அலுவல் மொழியாக உள்ளது. ஆசியா,ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பு என மூன்று பெரும் கண்டங்களின் மக்கள் அரபியை கற்கிறார்கள். பண்டைய காலத்தில் மருத்துவம், கணிதம் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்பு நூல்கள் அனைத்தும் அரபியில் மட்டும் இருந்ததும், அரபுலக விஞ்ஞானிகள் மற்றும் அறிஞர்களால் இயற்றப்பட்ட அவை பின்னாளில் இருண்ட ஐரோப்பிய நாட்டு அறிஞர்களால் மொழிப்பெயர்ப்பு செய்து பாடத்திட்டங்களாக மாற்றப்பட்டதும் வரலாற்று உண்மை.

முஸ்லிம்களால் அதிகம்  கற்கப்படுகிறது

இஸ்லாமிய சமயத்துடன் தொடர்பு பட்டதாகையால் உலகெங்குமுள்ள முஸ்லிம்களால் கற்கப்படுகிறது. வலமிருந்து இடமாக எழுதப்படும் இம்மொழியில் எழுத்துருக்கள் உலகின் வேறு எந்த மொழியின் சாயலும் இல்லாத தனித்துவ எழுத்துருக்களை கொண்டதாகும். அல்ஜீரியா, பஹ்ரைன், எகிப்து, எரித்திரியா, ஈராக், ஜோர்தான், குவைத், லெபனான், லிபியா, ஓமான், கட்டார், சவுதி அரேபியா, சிரியா, எமிரேட்ஸ், மொராக்கோ, சாத்ர், சாட், கொமரூஸ், மௌரிடானியா,பலஸ்தீன், தான்சானியா, துனிசியா, சூடான், சிரியா, யேமன் போன்ற 26 நாடுகளில் பேசப்படுவதோடு, அந்நாடுகளின் அதிகாரப்பூர்வ அரசு மற்றும் அலுவல்  மொழியாகவும் உள்ளது. முந்தைய காலங்களில் பாகிஸ்தான், ஆப்கான், உஸ்பெக்,துர்க்மெனிஸ்தான், கிர்கிஸ்தான், ஆஸர்பைஜான் போன்ற ரஷ்ய கிளை நாடுகளிலும் ஆட்சி மொழியாக இருந்தது பின்னாளில் விலக்கிக்கொள்ளப்பட்டது. ஆனால் சீனாவின் உய்குர்கள் அரபு பயில்வதை ஆறாவது கடமையாக கொண்டுள்ளனர்.

அரபு மொழி பல மொழிகளுக்குத் தன் சொற்களைக் கொடை அளித்துள்ளது. அவற்றில் பாரசீக மொழி, துருக்கியம், சோமாலி, போசுனியன், வங்காளி, உருது, இந்தி, மலாய், அவுசா போன்றவை அடங்கும். அதே போல அரபு மொழிக்கும் மற்ற மொழிகள் சொற்கொடை வழங்கியுள்ளன. அவற்றுள் ஹீப்ரு, கிரேக்கம், பாரசீகம், சிரியக்கு போன்ற மொழிகளும் அடங்கும். தமிழக முஸ்லிம்கள் தங்களுடைய வசதிக்காக “அர்வி” எனும் அரபிய எழுத்துருக்களை கொண்டு தமிழில் எழுதும் பழக்கமும் கொண்டிருந்தனர்.

பாரம்பரிய அரபுமொழி

செமித்திய மொழிக் குடும்பத்தை சேர்ந்த அரபி மொழியானது அரபு தீப கற்பத்தின் மத்திய மற்றும் வடக்கு பகுதிகளில் தான் முதன் முதலில் தோற்றம் பெற்றுள்ளது. பாரம்பரிய அரபு மொழியின் கல்வெட்டுக்களை ஆய்வு செய்ததில் அதன் வரலாறு கி.பி. 328 ஆம் ஆண்டு வரை பின்னோக்கி செல்கின்றது. 1901 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிரியா மற்றும் அரேபியாவின் எல்லைப்பகுதியான நபீதான் என்ற பகுதியில் வைத்து மிகப் பழமை வாய்ந்த எழுத்துக்கள் பெறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. நபீதான் என்ற பகுதியல் வைத்து கண்டெடுக்கப்பட்டதால் அந்த எழுத்துக்களுக்கு ‘நபீதான் ரெக்கார்ட்ஸ்’ என அழைக்கப்படுகின்றது.

இந்த ‘நபீதான கல்வெட்டுகளை ஆய்வு செய்ததில் அந்த எழுத்துக்கள் கி.மு. இரண்டாம் நுற்றாண்டு பழமை வாய்ந்தது என்றும் அந்த ‘நபீதான் கல்வெட்டுகள்’ கி.பி நான்காம் நுற்றாண்டிற்கு பின் பாரம்பரிய அரபு மொழியாக மாற்றம் பெற்றதாவும் ஆய்வுகள் கூறுகின்றது. கி.பி 4 ஆம் நுற்றாண்டு தொட்டு இஸ்லாம் அரபு தீப கற்பத்தில் உதயமாகும் வரையான காலப்பகுதியில் பாரம்பரிய அரபு மொழியானது ஒரு செல்வாக்கு பெற்ற மொழியாக காணப்படவில்லை. அரபு மொழி என்பது கி.பி. ஆறாம் நுற்றாண்டுகளின் ஆரம்ப பகுதியில் அரேபிய தீப கற்பத்தில் வாழ்ந்த நாடோடி பழங்குடி மக்களால் போசப்பட்ட ஒரு சிறுபான்மை மொழியாகும்

இஸ்லாத்தின் உதயத்துடன் பாரம்பரிய அரபு மொழியின் வரலாறே மாறியது. முகம்மது நபியின் (ஸல் ) பேச்சு மொழி அரபாக காணப்பட்டதனாலும் அரபு மொழியில் குர்ஆன் இறக்கப்பட்டதாலும் (தமிழில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது) அரபு மொழிக்கான தேவை அதிகரித்தது. எனவே ரோம், பாரசீகம் போன்ற முந்தைய வல்லரசு நாடுகளும் சீனா, ஆப்பிரிக்கா போன்ற இடங்களில் இருந்தும் பலர் மத்திய கிழக்கு நாடுகளை நோக்கி இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளல், போர், வியாபாரம் போன்ற தேவைகளுக்காக வெளிநாட்டவர்கள் வர தலைப்பட்டனர். எனவே பண்மை அரபு மொழியின் இலக்கண இலக்கிய மரபுகளை கற்பதற்கும் ஆய்வு செய்வதற்குமான வாய்ப்பு தேவை உலக அளவில் ஏற்பட்டது. உமைய்யா மற்றும் அப்பாஸிய கலீபாக்களின் காலம் தொட்டு அரபுமொழியின் ஏற்றம் தொடர்கிறது.

அரபு மொழி ஒரு செழுமை மிக்க மொழியாகும். சொற் சுருக்கம், கருத்து செறிவு உண்மை தன்மை, பிற மொழிகளிடம் இருந்து இறவல் வாங்காத தனித்துவம் போன்றன அரபு மொழியில் காணப்படுகின்ற சிறப்பு அம்சங்களாகும். அரபு மொழியில் 28 எழுத்துக்கள் காணப்படுகின்றன. அரபு மொழியானது உலகில் காணப்படுகின்ற ஏனைய மொழிகளைவிட பல வகையிலும் வித்தியாசமான இலக்கண முறையினை கொண்டுள்ளது. அவற்றில் பின்வருபவன முக்கியமானதாகும்:

1) அரபு மொழியில் சொற்களில் கூட ஆண்பால் பெண்பால் மிக உன்னிப்பாக கையாளப்படுகின்றது. 2) வாக்கியங்களில் கூட ஆண்பால், பெண்பால் வாக்கியங்கள் என்ற இரு முறைகள்                      காணப்படுகின்றது.
3) மேலும் அரபு இலக்கனத்தில் ஒருமை, பன்மை போல் இருமையும் மிக முக்கியமாகும் இந்த ஒருமை,இருமை மற்றும் பன்மை களில் கூட ஆண்பால், பெண்பால் அவதானிக்கப்படுகின்றன.

அரபு மொழியில் கூறிப்பிட்ட ஒரு சொல்லினை பல பெயர்களில் அழைக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு ‘ஒட்டகம்’ என்ற சொல்லை குறிப்பதற்கு 1000 இற்கும் மேற்பட்ட சொற்கள் காணப்படுகின்றன.

அரபு மொழியானது மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா போன்ற நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் மொழியாக வளர்ந்துள்ளது. தற்போது 26 நாடுகளில் அரபு மொழி தேசிய மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா நாடுகளில் இருந்தும் பொதுவாக ஏனைய ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்கா நாடுகளில் இருந்தும் வெளியாகின்ற பத்திரிகைகள், புத்தகங்கள், சஞ்சிகைகள் மற்றும் செய்திச் சேவைகள் போன்றவற்றிலும் மேலும் நடைபெறும் மாநாடுகள் கூட்டத் தொடர்களிலும் இந்த நவீன அரபு மொழியே பயன்படுத்தப்படுகின்றது.

அரபி எழுத்துக்கள்

ஆரம்பகாலத்தில் அரபி எழுத்துக்கள் ஒரே எழுத்துருவைக் கொண்டிருந்தாலும் தற்போது உள்ள எழுத்துகளைப் போல் “நுக்தா” புள்ளி அமைப்பிலான எழுத்துகள் இருக்கவில்லை. உதாரணமாக
ع= ஆயின், غ=க்ஹாயின், س=ஸீன், ش=ஷீன் இன்னும் பல எழுத்துகள் ஒரே வடிவ அமைப்பையும், ஆனால் வெவ்வேறு ஒலி அமைப்பையும் கொண்டுள்ளன. அவற்றை வேறுபடுத்துவது புள்ளிகள் தான். குர்ஆன் உலக மக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்ட வேதமாக இருப்பதால், அரபி மொழியைக் கற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அரபி அரபியற்குத் தாய் மொழியாக இருந்ததால் எந்த விதமான சிரமமும் இன்றி பேசி, மற்றும் குர்ஆனையும் ஒதிவந்தனர், ஆனால் அரபி அல்லாத பிற மொழிக்காரர்களுக்குக் கடினமாக இருந்ததால் குர்ஆன் ஓதுவதில் பிழை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் “நுக்தா” என்ற அடையாளப் புள்ளி அமைப்பு கொண்டு வரப்பட்டது. உதாரணத்திற்கு مثل(மஸல) என்ற வார்த்தை முற்கால எழுத்துப்படி எழுதப்படுமானால் مىل என்று புள்ளி இன்றி எழுதப்படும்,

ஆனால் அரபியை தாய்மொழியாக கொண்டவர்களால் புள்ளிவடிவ எழுத்துக்களை புள்ளி இல்லாமலே சரியாகப் படிக்கமுடியும், அரபியர் அல்லாதவர்களுக்கு பிழை ஏற்பட வாய்ப்புள்ளது என்பதாலும், குர்ஆன் இறைவார்த்தை என முஸ்லிம்கள் நம்புவதாலும் பிழையின்றி படிப்பதற்கு ஏற்றவாறு நுக்தா என்னும் புள்ளி அடையாள வடிவத்தை கொண்டுவத்துள்ளனர். அது போலவே அரபு மொழிக்கென தனியாக எண் முறையும் உண்டு. அம்மொழியின் மேலும் ஒரு சிறப்பாக இந்த எண்ணெழுத்துக்கள் வலுச்சேர்க்கின்றன. தமிழுக்கும் இந்த சிறப்பு பெருமை உண்டு

ஐநாவின் கல்வி,அறிவியல் மற்றும் கலாச்சார மையம் சார்பாக கொண்டாடப்படும் அரபுமொழி தினத்தன்று பொது விடுமுறை அறிவிக்கும் பழக்கம் அரபு நாடுகளில் இல்லை ஆனால் கல்வி மற்றும் கலாச்சார நிலையங்களில் அரபுமொழி கதை,கவிதை,கட்டுரை மற்றும் இலக்கிய போட்டிகள் நடைபெறும், வெற்றி பெரும் மாணவர்களுக்கு பரிசுகள் கொடுத்து ஊக்கப்படுத்தப்படும். இந்தியாவில் மதரஸாக்களில் இந்த தினம் எந்தளவுக்கு அனுசரிக்கப்படும் என தெரியவில்லை ஆனால் மலேசிய மற்றும் இந்தோனேசிய மக்கள் இந்த அரபுமொழி தினத்திற்கு அதிமுக்கிய இடமளிக்கின்றனர்.

இன்று உலக வர்த்தகத்தில் பயன்படும் உலகச் செம்மொழிகளில் சீன மொழிக்கு அடுத்த இடத்தில் உள்ள மொழி என்று பல பெருமைகள் கொண்டது அரபு மொழி. அரபு நாட்டில் வாழும் அந்நிய இனத்தினர் பலர் அரபு மொழியைத் தாய்மொழியாகவும் பேசும் மொழியாகவும் கொண்டிருக்கின்றனர். அரபிகளுக்கு அவர்களது மொழியின் மீது தீராத காதல் என்பது போக அவர்களுக்கு ஒரு வெறித்தனமான அன்பும் உண்டு. இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அரபு பேசுவோர் மனிதர் என்றும் அரபு பேசாதோர் அஜமி அதாவது மிருகம் என்றும் கூறி ஏளனப்படுத்துமளவிற்கு அவர்கள் மொழி வெறியர்களாக இருந்துள்ளனர்.

நபியவர்களின் தூதுத்துவத்திற்கு அவர்களது இறுதி ஹஜ் பேருரையின் போது மிக கவனமாக இந்த மொழிவெறிக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள். அரபி பேசுவோர் மற்ற மொழி பேசுபவரைவிட எவ்விதத்திலும் உயர்ந்தவருமில்லை. அரபி பேசாதோர் அதனை தாய்மொழியாக கொண்டவரை விட எவ்விதத்திலும் தாழ்ந்தவருமில்லை என்றனர்.

                                                                                                                                     – Ummu Aadil

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *