ஏமன் போர்

ஏமன் நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரை நிறுத்துவது தொடர்பாக, ஸ்வீடனில் ,
ஐ.நா முன்னெடுக்கும் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்குகிற நிலையில் சவூதியை ஆயுத வியாபாரத்திற்காக தூண்டிவிட்டு போதா குறைக்கு படைகளையும் அனுப்பி வைத்து இந்த கொடூர போருக்கு வித்திட்டதே அமெரிக்கா தான். அமெரிக்கா,பிரான்ஸ், இங்கிலாந்து, இஸ்ரேல் என அநியாயக்கார கூட்டத்துடன் சேர்ந்து உள்நாட்டில் அமைதயை குலைத்தவர்களே…அழிகிற வரை வேடிக்கை பார்த்துவிட்டு புறவாசல் வழியாக வந்து அதாவது ஐநா உதவி செய்கிறது என்கிற போர்வையில் அமைதிப்பேச்சு வார்த்தையில் ஈடுபட வருவார்கள்.

ஏமன் நாட்டில் ஹவுதி போராட்டக்காரர்கள் மற்றும் அரசு படையினர் இடையே கடந்த 2015 மார்ச் தொடங்கி 4 ஆண்டுகளாக உச்சக்கட்ட உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் 56,000 பேர் கொல்லப்பட்டனர். 2.20 லட்சம் பேரின் நிலை என்னவென்றே தெரியவில்லை.
லட்சக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். உள்நாட்டில் வாழும் 8 லட்சம் மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. இதுமட்டுமின்றி காலரா போன்ற கொடிய நோய்களின் தாக்கத்தாலும், பஞ்சம் அதிகரித்ததாலும், எண்ணற்ற குழந்தைகள் நாளுக்கு நாள் செத்து மடிகின்றன. இதுவரை 85,000 குழந்தைகள் உணவு தட்டுப்பாட்டின் காரணமாகவும் ஊட்டச்சத்து குறைப்பாடு காரணமாகவும் உடலுறுப்பு இயங்குநிலை தடைபாட்டால் சோமாலியர்கள் போல ஆகிவிட்டனர்.

ஏமனின் அஸ்லாம் மாவட்டத்தில் மக்கள் முற்றிலுமாக தங்களுடைய ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் இழந்து உணவின்றி தவித்து வரும் நிலையில் அவர்கள் தெருவோரங்களில் வளரும் ஒருவித களைச்செடியின் இலைகளை பறித்து சமைத்து உண்டு பசியாற்றி வருகின்றனர், உணவின்றி பசியால் வாடி , கடந்த மாதம் இறந்து போன 7 வயது சிறுமி அமல் ஹுசேன் உலகின் கவனத்தை ஈர்த்துச்சென்றாள், ஆனால் அவளை போல மேலும் பல்லாயிரம் குழந்தைகளின் நிலையும் இது தான். பிறந்து ஏழு மாதங்களாக தாய்பாலே குடிக்காத பாலகியும் இதில் அடக்கம்.

yemen Civil War

சிரிய போரின் போது உணவு கிடைக்கப்பெறாத மக்கள் குப்பைத் தொட்டிகளில் இருந்தும் , புற்பூண்டுகளையும் உண்டு பசியாற்றி வந்தது ஞாபகத்தில் வருகிறதா? பலஸ்தீனில் மக்கள் கற்களை கடித்து திண்றும் கழிவு நீரை குடித்தும் செத்துப்போனது நினைவில் நிழலாடுகிறதா? இவற்றை விட பெருங்கொடுமை ஏமனில் நடந்து வருகிறது.

உள்நாட்டு போர் தீவிரமான நிலையில் அங்கு பால், ரொட்டி, உணவுப்பொருட்கள் மற்றும் பெட்ரோல் என அனைத்து விதமான அத்தியாவஸ்ய பொருட்களும் மும்மடங்கு விலையேற்றத்துடன் விற்கப்படுகிறது. உலக சேவை மையங்கள் பலவும் இணைந்து ஏமனிகளுக்கு உணவளித்து வரும் வேளையில் எதுவுமே போறாத நிலையில் தான் உள்ளது. அந்நாட்டின் பிரஜைகளில் திருமணம் முடிப்போரும் தங்களால் இயன்ற அளவு தங்களுடைய திருமண விருந்தினை ஒருவேளை உணவாக கொடுத்து அவ்வப்போது அவர்களுக்கு பசியாற்றி வருகின்றனர்.

yemen war

இந்த பசி பட்டினி, பஞ்சத்தை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஐ.நா.அமைப்பு, ஸ்வீடன் நாட்டில் இருத்தரப்பினர் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்துகிறது. இதில் ஹவுதி போராட்டக்குழு சார்பில் முகமது அப்துல் சலாம் குழுவினர் கலந்து கொள்கின்றனர்.ஏமன் அரசாங்க பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோல்ம் வந்துள்ளனர். இதற்கு முன் 2016-ம் ஆண்டு, குவைத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை உலக அரங்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஜிபூட்டியில் (சோமாலிலாண்ட் அருகே இருக்கும் சிறிய நாடு) , இருந்து செங்கடல் கடந்து அமைந்திருக்கும் ஏமனில் நடைபெற்று வருகின்ற உள்நாட்டு போருக்கு ஆதரவு அளிக்கும் கூட்டணி படை, சவூதி அரேபியாவின் தலைமையில் செயல்படுகிறது.

இந்த படை நடவடிக்கைக்கு ஜிபூட்டியில் அமைக்கப்பட்டுள்ள ராணுவ தளம் உதவும் என தெரிகிறது. அமெரிக்க மற்றும் பிரான்ஸ் ராணுவ தளங்களை ஏற்கனவே கொண்டுள்ள ஜிபூட்டியில், சீனாவும் ஒரு ராணுவ வசதியை அமைந்து வருகிறது.

சவூதி அரோபியாவுடன் நெருங்கி வருவதன் அடையாளமாக, இரானுடன் ராஜீய உறவுகளை ஜிபூட்டி ஜனவரி மாதம் துண்டித்துக் கொண்டது.

ஏமனில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் மிக முக்கிய ஹூத்தேதோ துறைமுகத்தில் சவூதி ஆதரவு பெற்ற அரசுப் படைகள் தாக்குதல் தொடங்கியுள்ளன. இரானில் இருந்து ஆயுதங்களை கடத்துவதற்கு ஹூத்தேதோ துறைமுகத்தை கிளர்ச்சியாளர்கள் பயன்படுத்துவதாக சௌதி தலைமையிலான கூட்டணி நாடுகள் குற்றஞ்சாட்டுகின்றன.
இரானும், கிளர்ச்சியாளர்களும் இதனை மறுத்து வருகின்றனர்.

கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் வாழும் மக்களுக்கு உதவிகளை கொண்டு சேர்ப்பதற்கு இந்த துறைமுகம் மிக முக்கிய வாயிலாக இருப்பதால், இது தாக்கப்பட்டால் மனிதப் பேரழிவு ஏற்படும் என்று உதவி நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்திருந்தன.

போரால் அவதிப்படும் இந்த நாட்டில் 80 லட்சம் பேர் பட்டினியால் துன்பப்படும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளனர் என்கிற அதிர்ச்சியூட்டும் தகவலை தருவது தமீர் கிரோலோஸ் எனும் Save the children எனும் தொண்டு நிறுவனத்தின் தலைவர். உலகில் நிகழ்ந்த போர் கொடுமைகளுக்கும் பஞ்சத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையிலும் ஏமன் தான் உச்சநிலையை தொட்டுள்ளதாக அவர் மேலும் அறிவிக்கிறார்.

கிளச்சியாளர்கள், ஹூத்தேதோ துறைமுகத்தில் இருந்து பின்வாங்க வேண்டும் என்ற காலக்கெடுவை இரானின் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் புறக்கணித்துவிட்ட பின்னர், குண்டு தாக்குதல் தொடங்கியது.
சவூதி அரேபியா தலைமையிலான பெரிதும் வளைகுடா நாடுகளைக் கொண்ட கூட்டணி, ஏமனிலுள்ள நன்றாக பாதுகாக்கப்பட்ட இந்த முக்கிய நகரை கைப்பற்ற முயலுவது இதுவே முதல்முறை.

ஹூதி கிளர்ச்சியாளர்களும், அதனுடைய கூட்டணி படைப்பிரிவுகளும், தலைநகர் சனா உள்பட நாட்டின் வட மேற்கு பகுதிகளை முற்றுகையிட்ட 2014ம் ஆண்டு பிற்பாதியில் இருந்து இந்த மோதல் தொடங்கியது.
அதன் விளைவாக, ஏமனின் அதிபர் அப்துரப்பூ மன்சூர் ஹாதி வெளிநாடு தப்பி செல்ல வேண்டியதாயிற்று.

இரான் நாட்டின் பினாமியாக பார்க்கப்பட்ட இந்த குழுவின் வளர்ச்சியால் எச்சரிக்கை அடைந்த சவூதி அரேபியாவும், பிற சன்னி அரேபிய எட்டு நாடுகளும் 2015ம் ஆண்டு மார்ச் மாதம் ஹாதியின் அரசை மீட்டெடுக்க ராணுவ நடவடிக்கையை தொடங்கின என்றெ உலகளவில் தகவல்களை பரப்பி நம்ப வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் உண்மையில் 2015 போரின் போது அமெரிக்க டாலரில் 1.9 பில்லியன் தொகைக்கு ராணுவத்தளவாடங்களை சவூதி அரசிற்கு அமெரிக்கா விற்பனை செய்துள்ளது. இதுவே 2016 கணக்குப்படி 6.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு நவீன குண்டுகளும் போர் தளவாடங்களும் சவூதி வாங்கியுள்ளது தெரியவருகிறது. உலக நாடுகளின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட இந்த இராணுவ மற்றும் ஆயுத விநியோகம் பற்றிய அடுத்த ஆண்டுகளுக்கான விற்பனை அளவு வெளியிடாமல் மூடி மறைக்கப்பட்டுள்ளது.

ஒரு நாட்டில் நடக்கும் உள்நாட்டுப் போரினை கட்டுப்படுத்த சவூதியும் அமெரிக்காவும் நேசப்படைகளும் யார்? சவூதி ஒன்றும் உலக இஸ்லாமிய நாடுகளின் தலைமையிடமல்ல இந்நிலையில் உள்நாட்டு போரினை அடக்க தெரியாத ஒரு நாட்டின் அதிபரோ பிரதமரோ தங்களது தோல்வியை ஒப்புக்கொண்டு ராணுவ ஆட்சியை அமல்படுத்த வேண்டும் அல்லது அரசினை கலைத்துவிட்டு தேர்தல் நடத்தி வேறு அதிபரை மக்கள் தேர்ந்தெடுக்கும் வரை போர் நிறுத்தத்தை அமல்படுத்தி வேறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இது இரண்டுமல்லாது தங்களது நாட்டு பாதுகாப்பினை, அடுத்துள்ள ஒரு வலிமையான நாட்டிடம் ஒப்படைப்பது எந்த சரித்திரத்திலும் இல்லாத ஒன்று. இத்தனை பில்லியன் டாலர்களுக்கு ஒரு புதிய நாட்டினையே கட்டமைத்துவிட முடியும் என்கிற நிலையில் முஸ்லிம் மக்கள் சதக்காவாக ஸக்காத்தாக வழங்கும் பணத்தை பயன்படுத்தி அந்நிய நாட்டிடம் ஆயுதங்களை வாங்கி அப்பாவி மக்கள் மீது போர் பிரகடனம் செய்து செயற்கையான பஞ்சத்தை உருவாக்கி குழந்தைகளையும் பெண்களையும் கொத்துக்கொத்தாக கொன்றொழித்து வருவது இனப்படுகொலை தவிர வேறில்லை.

அமைதியை போதிக்கும் இஸ்லாமிய நாடு என்றும், உலகையே உற்று நோக்க வைத்திருக்கும் உன்னத நாடு என்றும் தங்களை கூறிக்கொள்ளும் சவூதி அரசு , இதுபோன்ற பொறுப்பற்ற தன்மையுடன் போர் என்கிற பெயரில் அந்நிய தீய சக்திகளுடன் இணைந்து சொந்த சமுதாய மக்களையே கொன்றொழித்து வரும் சவூதி..உலகின் முஸ்லிம்கள் புனிதமாக கருதும் காபத்துல்லாஹ்வை ,மாண்புமிகு மக்கத்துல் முஷ்ஷரஃபாவை பராமரிக்கும் தகுதியை இழந்துவிட்டது.

உலக நாடுகளில் ஆப்பிரிக்க கண்டத்தில் தான் மிக அதிகமான நாடுகள் உணவு பஞ்சத்தால் தத்தளித்து வருகின்றன. ஏறத்தாழ அவை சோமாலியா ,நமீபியா,மடகாஸ்கர் உட்பட 31 நாடுகள் அடங்கும், அதுபோல உக்ரைன்,ஆப்கான்,பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளும், கிழக்காசிய நாடுகளில் பர்மா, லாவோஸ், தாய்லாந்து, வடகொரிய நாடுகளும் , அமெரிக்க கண்டத்தில் மெக்சிக்கோ மற்றும் அர்ஜென்டினா நாடுகளும் கடுமையான உணவு பஞ்சத்தால் தவித்துக்கொண்டிருக்கின்றன.

இவை அனைத்து நாடுகளை விடவும் பலஸ்தீன்,சிரியாவும் அதற்கடுத்து அராபிய தீபகற்பத்தில் ஏமனும் தான் அதிகார போட்டியில் விளைந்த போரின் கோரப்பசிக்கு ஆளாகி கடும் பஞ்சத்திலும், ஊட்டச்சத்து குறைபாட்டிலும், நோய்நொடிகளிலும் சிக்கி மக்கட்செல்வத்தை கொத்துக்கொத்தாக இழந்து வருகிறது. உலகில் மிதமிஞ்சிய செல்வத்தை எண்ணெய் வளங்களாக ஒருபுறமும் ,அதை விற்று காசாக்கி தங்க கட்டிகளாக மறுபுறமும் தன்னகத்தே கொண்டுள்ள சவூதி அரசாங்கம் , அண்டை நாடுகளின் ஏழை மக்கள் கொண்ட பசியினை போக்காமல் அவர்கள் மீது குண்டுமழை பொழிந்து கொன்றுகுவித்து வருகிறது.

சன்னியிம் சியாயிசம் ஆகிய இரண்டிற்குமான அதிகார போட்டி என ஏமனில் நடக்கும் உள்நாட்டு போர் , இரான்-சவூதி இடையிலான வல்லாதிக்க நாடுகளின் போட்டி பொறாமைக்கு அநியாயமாக அடிமைப்பட்டுக்கொண்டுள்ளது என்பதே நிதர்சனம். யூதரோடும் நசாராக்களோடும் கரம் கோர்த்து சியாக்களை அழிக்கிறோம் என்பதனை புத்தியுள்ள எந்த இஸ்லாமிய நாடும் ஏற்காது.

-Ummu Aadil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *