சஹாரா

அதிசய சஹாரா அனாவஸ்ய படைப்பா?

இறைவன் எதையும் வீணாக படைக்கவில்லை , ஒவ்வொரு படைப்பினத்திற்கும் அதுவதற்கான வேளை வரும் பொழுது அதன் பயன் வெளிப்படும் என  திருக்குர்ஆன் வசனங்களில் நாம் காண்கிறோம்.

பாம்பினை படைத்த இறைவன் அதில் விஷத்தை தவிர வேறெதுவும் வைக்கவில்லை பிறகு அதன் படைப்பெதற்கு ? என சலிப்புடன் வினவினோம்…(பாம்பு தீண்டியதாலும் மரணங்களும் நிகழ்ந்த காரணத்தாலும் இந்த சலிப்பு ) பாம்பின் விஷத்தில் உயிர்காக்கும் மருந்துகள் தயாராகிறது என்பதனை தெரிந்துகொண்டு பிறகு பேசாமலிருந்தோம். அற்பத்திலும் அற்பமான ஈ எதற்கு படைக்கப்பட்டது , உணவு உண்ணும் வேளைகளில் தொந்தரவும், பிராணிகளிடமிருந்தும் அசுத்தத்திலிருந்தும் நமக்கு நோயை பரப்புகிறதே என்றோம்..! கொலைகாரர்களின் ரேகைகளை கண்டறிய இன்று நுண்ணறிவியல் துறை வல்லுனர்கள் ஈக்களுடைய உதவியை நாடியுள்ளனர் என்பதை அறிந்த பிறகு…அற்பமான ஈ இப்போது நமக்கு விஞ்ஞானி அளவிற்கு உயர்ந்ததாக தெரிகிறது. குர்ஆனில் ஈயை பற்றிய வசனங்களை இறக்கி , அவ்வசனங்களுக்கான அர்த்தமும் பயனும் உணர மனித சமூகத்தை 1400 வருடங்களாக காக்க வைத்துள்ளான் .. அல்ஹம்துலில்லாஹ்.

Desert Sahara

சரி சஹாரா பாலைவனத்தை பற்றிய நமது மதிப்பீடு என்ன? சரித்திரத்தில், வரலாற்றாசிரியர்களின் பயணக்குறிப்புகளில் , வாகன வசதிகள் முன்னேற அஞ்ஞான காலத்து வணிகர்கள் வியாபாரிகள் என ஒட்டுமொத்த வேற்று நில வாசிகளும் சஹாரா பற்றி கூறியது என்ன? “சஹாரா – ஆப்பிரிக்காவின் தலையில் அமர்ந்த நரகம்” என்று தானே.! ஆம், அது அப்படித்தான். சஹாரா – அங்கும் வாழும் பர்பர்கள் தவிர யாராலும் காலங்கடத்த இயலாது ,மறுமை மஹ்ஷருக்கு இணையானதுமான ஒரு வறட்சிப்பிராந்தியம். மிதமிஞ்சிய வெப்பமும், உஷ்ண கொடுமையும், குருகு,பாம்பு,தேள் தவிர வேறு என்ன உண்டு சஹாராவில்…!? நல்லவேளையாக பாலைக்கடலில் உதித்தொரு படகினை போல ஒட்டகம் என்றொரு பிராணி இல்லாது போயிருந்தால்…! அம்மணல் வனத்தை கடப்பது மகா கஷ்டமாகி போயிருக்கும்.

 

சஹாரா உருவாக காரணம் , 7 மில்லியன் வருடங்களுக்கு முன் “தெத்திஸ்” எனும் கடல்பகுதி உள்வாங்கப்பட்டு, மத்தியத்தரைக்கடல் பகுதி தோன்றியது, அக்கடலில் வடக்கே “ஐரோப்பாவின் ஆல்ப்ஸ் மலை” உயர்ந்தது, தெற்கே  வட ஆப்பிரிக்க முழுக்க தெத்திஸ் கடலின் எச்சமாக, உலகின் மிகப்பெரிய பாலைவனம் சஹாரா தோற்றுவிக்கப்பட்டது. டெக்டானிக் தட்டுகள் நகர்வுகளால் லோரேசியா,கோண்டுவானா ஆகிய இருபெரும் கண்டத்திட்டுகளின் நகர்வால் இது உருவானது. சஹாரா இப்போதுள்ள தனது வடிவத்தை பெற 2-3 மில்லியன் வருடங்கள் ஆனது என்பது நிலவியலாளர்களின் கருத்து. புவி வெப்ப மயமாதல் காரணமாக சஹாரா இன்னும் தனது எல்லைகளை பெருக்கிக்கொண்டே தான் போகவுள்ளது. சஹாரா சுருங்காது.

இந்த சஹாரா பாலையின் மீட்சி தான் சவூதி தீபகற்பத்தின் பாலையும், இந்திய ராஜஸ்தான் தார் பாலையும். மத்திய தரைக்கடல் காற்று ராஜஸ்தான் வரை வீசிவதாகவும்… அங்கிருந்து மணற்துகள் காற்றில் கடத்தப்பட்டு தார் பாலைவனத்தை அடைகிறது என்றால் காற்றின் சக்தியை நாம் உணர வேண்டும்.சரி இப்ப இந்த சஹாராவிற்கும், அதன் காற்றிற்கும் என்ன வந்தது என கேட்கின்றீர்களா? ஆம், அதன் அவசியத்தை மனிதன் உணர ஆரம்பித்து இரண்டு வருடங்கள் மட்டுமே ஆகிறது. அப்படியென்ன பயன் உள்ளது பாலைவென பெருவெளியில்..! தெரிந்துகொள்வோம்

சஹாரா பாலைவனம் மொத்தமாக 9மில்லியன் கிலோமீட்டர்கள் நீளமுடையது. 10 வட ஆப்பிரிக்க நாடுகளை உள்ளடக்கியது.  அதில் ஆங்காங்கே ஒயாஸிஸ் எனப்படும் பாலைவனச்சோலைகள் காணப்பட்டாலும். சஹல் எனும் 6 நாடுகளை உள்ளடக்கிய கீழை சஹாரா கொஞ்சம் விவசாயம் செய்ய தகுதியுடையது.  7775 கிலோமீட்டர் தூரத்திற்கு சுமார் 11,662,500 ஹெக்டேர் பரப்பளவிற்கு மரங்களை தடுப்புச்சுவர் அரண் போல  வளர்த்து  சஹாரா-சஹல் இருபகுதிகளையும் பிரித்து வைத்துள்ளனர்.

இதில் மொராக்கோவின் பாலைப்பகுதி என்பது மழையே இல்லாத மிக வறண்ட (24×7 – 365×24 )  பகுதியாக அறியப்பட்டது. இங்கு தான் உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த, மிகவும் பெரிய சூரிய ஒளி மின்சார தயாரிப்பகம் தொடங்கப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டு தொடங்கிய இந்த சோலார் பவர் பிளான்டில் மொத்தம் 3 பேட்ஜ்கள் அடங்கிய சோலார் பேனல்களில் தற்போது முதல் பேட்ஜ் தனது உற்பத்தியை தொடங்கியுள்ளது. 2020க்குள் இந்த பணி முற்றிலுமாக முடிவடைந்துவிடும். இந்த பகுதிக்கு “நூர் காம்ளக்ஸ்” என பெயரிட்டுள்ளனர்.

சரி இதிலென்ன பிரமாதம் ? உலகின் மிகப்பெரிய சோலார் எனர்ஜி பவர் பிளான்டின் மூலம் உலகின் ஒட்டுமொத்த மின்சார தேவையை பூர்த்தி செய்துவிட முடியும். முதற்கட்டமாக தயாரிக்கப்பட்ட மின்சாரத்தை கொண்டு சஹாராவின் இருண்ட கிராமங்களுக்கு மின் வசதி செய்யப்பட்டு அவர்களை இருளில் இருந்து காப்பாற்றியுள்ளனர். இரண்டாம்கட்டமாக ஐரோப்பிய யூனியனிற்கு குறிப்பாக பிரான்ஸ் நாட்டிற்கு இந்த மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. ஐரோப்பிய பிராந்தியம் முழுவதும் மின்சார தேவையை பூர்த்தி செய்ததும், அடுத்தகட்டமாக ஒட்டுமொத்த உலகிற்கும் ஒளியேற்றும் விதமாக இந்த நூர் காம்ப்ளக்ஸ் உதவ இருக்கிறது.

சஹாரா முழுக்க சோலார் பேனல்கள் மாட்டப்பட்டால் உலகின் எண்ணெய், நிலக்கரி மற்றும் எரிபொருளுக்கான வளங்களை சுரண்ட தேவையிருக்காது என்பதே இதன் அடிப்படை விஷயமாகும். ஒட்டுமொத்த உலகிற்கும் 24×7 ஒளியேற்ற சஹாரா பாலைவனத்து வெயில் ஒன்றே போதும் என்பதே இதன் வியத்தகு உண்மை. இந்த திட்டத்திற்கான பணப்பற்றாக்குறை காரணமாக மிக மிக நிதானமாக நடக்கும் இந்த திட்டம்… பல நாடுகளின் உதவியுடன் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக 3.9 பில்லியன் அமெரிக்க டாலர் தொகையில் தொடங்கப்பட்டுள்ள இந்த பவர் பிளான்டிற்கு அனைத்து நாடுகளும் உதவ முன்வந்துள்ளனர் , இதன் மூலம் எரிசக்தியால் அதிகரிக்கும் கார்பனையும், காற்று மாசடைதலையும் தவிர்க்க முடியும்.

மணல்பரப்பு முழுவதும் கண்ணாடிகளை அடுக்கி வைத்தும், சஹாரா மணலின் வெண்மையை பயன்படுத்தி மேலும் அந்த சூரிய சக்தியை அதிகப்படுத்தியும் மீன்னூக்கிகளில் சேமித்துவருகின்றனர். மற்றொரு புறம் பெரிய பெரிய காற்றாலை காற்றாடி மூலம் வெப்பச்சலனத்தை உருவாக்கி மழை பெருவதற்கான திட்டத்தையும் அதனூடே தொடங்கியுள்ளனர். இதனால் அங்கு மழையும் கிடைத்து, நீரும் கொஞ்சம் சேமிக்கப்பட்டு தற்போது சிறிய அளவில் விவசாயமும் தொடங்கப்பட்டுள்ளது. சஹாராவின் 1.2% பாலை நிலத்தை மட்டும் இந்த சூரியசக்தி மின்சாரம் தயாரித்து ஐரோப்பாவிற்கு மின்சார வசதி செய்யமுடியுமெனில்…ஒட்டுமொத்த சஹாராவும் மின்சார உற்பத்தியில் இறக்கப்பட்டால்…!!

 

விரைவில் சஹாராவில் ஆறுகள் ஓடினாலும் ஆச்சரியப்படுவதற்கல்ல.. இறைவனது படைப்பில் எதுவும் வீணானது அல்ல என்பதையும் அதுவதற்கான காலநேரம் வரும்போது அதற்கான பயன்பாடும் தெரியவரும் என்கிற குர்ஆன் வசனத்தை இங்கே நினைவு கூறுவோம்.

வானங்களையும், பூமியையும், இவைகளுக்கு மத்தியில் உள்ளவைகளையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை. இது (வீணென்பது) நிராகரிப்பவர்களின் எண்ணமேயாகும். நிராகரிக்கும் இவர்களுக்குக் கேடுதான்; இவர்களுக்கு நரகமே கிடைக்கும்.

(அல்குர்ஆன் : 38:27)

அவன், வானங்களையும் பூமியையும் உண்மையான காரணத்திற்கே படைத்திருக்கின்றான். (வீணுக்காக அல்ல.) அவனே இரவைச் சுருட்டிப் பகலை (விரிக்கிறான்.) அவனே பகலைச் சுருட்டி இரவை (விரிக்கிறான்.) சூரியனையும், சந்திரனையும் அடக்கி வைத்திருக்கின்றான். இவை ஒவ்வொன்றும், அவைகளுக்குக் (குறிப்பிட்ட எல்லைக்குள்) குறிப்பிட்ட காலப்படி நடக்கின்றன. (நபியே! நீங்கள்) அறிந்துகொள்ளுங்கள்! நிச்சயமாக அவன் அனைவரையும் மிகைத்தவனும் மிக மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.

(அல்குர்ஆன் : 39:5)

  -Ummu Aadil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *